மதராச பட்டினம்
இயக்கம் : விஜய்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
இசை : பிரகாஷ் G.V.
எடிட்டிங் : அந்தோணி
தயாரிப்பு : கல்பாத்தி அகோரம்
நடிகர்கள் : ஆர்யா , நாசர்,பாலா சிங் , ஹேமா பாஸ்கர், பாலாஜி, ஜீவா
நடிகைகள் : ஆமி ஜாக்சன் .
படத்தின் தலைப்பை பார்த்து விட்டு ஏதோ நகரத்தை பற்றிய படம் என்று எண்ணி விடாதீர்கள் !!! ரத்தமும் சதையுமாய் உணர்வுகளை உள்வாங்கி சொல்லப்பட்ட படம் ,
அட!! தமிழ் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அருமையாய் ஒரு படம்.
மிக நேர்த்தியாய் சொல்லப்பட்டு இருப்பது மிக நன்று.
இயக்குனர் மிகவும் சிரத்தை எடுத்து இந்த கதையை ஒரு காப்பியமாய் நமக்கு தந்திருப்பது சிறப்பான விஷயம்.
ஒருவரை ஒருவர் மிஞ்சி கதாபாத்திரமாக மாறி தங்களுடைய பங்களிப்பை
முழு ஈடுபாட்டுடன் ஒருங்கிணைந்து கொடுத்திருப்பது பாராட்டுகுரிய விஷயம்
கதையும் , கதை களமும் கையாண்டு இருக்கும் விதமும் மிக அருமை.
காட்சி அமைப்புகள் , கலை நுனுகக்கங்கள் , ஒளிப்பதிவு, இசை அனைத்தும் தூண்களாய் இருந்து இந்த படத்தை தாங்கி நிற்பது மிக சிறப்பு.
படத்தில் குறையை பூத கண்ணாடி வைத்து பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாது.
ஆனாலும் மேல் தட்டு மக்களுக்கும் கீழ் தட்டு மக்களுக்கும் நடக்கும் போராட்டம் இன்னும் எத்தனை காலம் தான் சொல்ல போகிறார்கள் என்பது படத்தின் பலவீனம் தான்.
இது இந்திய சுதந்திரத்தின் கால கட்டத்தின் போது எடுக்கப்பட்ட படமாகையால் அனைத்தையும் கவனம் கொண்டு காட்சி காட்சியாய் நம் மனதில் பதிய வைத்திருக்கிறாய் இயக்குனர். அதற்காக அவரை மனதார பாராட்டலாம்.
காதலை இவ்வளவு அழகாய் சொல்ல முடியுமா? இறந்து போன காதலிக்காக கட்டப்பட்ட தாஜ் மஹால் ஆகட்டும், அதன் பொலிவு இன்றும் காதலின் சின்னமாய் நம் மனதில் பதிந்துள்ளது , அதை போல் தான் இந்த படமும் , கதையின் கரு காதலை மையமாக கொண்டு சொல்ல பட்டு இருப்பதால் நம்மை பல இடங்களில் அட போட வைத்து விடுகிறார் படத்தின் இயக்குனர்.
படத்திற்கு வலு சேர்ப்பது ஒளிப்பதிவும் , இசையும் , கண்ணுக்கு குளிர்ச்சியாய் ஒளிப்பதிவு என்றால்(நன்றி நீரவ் ஷா ) , காதிற்கு இனிமையாய் இசை , பின்னணி இசையாகட்டும், பாடல்கள் ஆகட்டும் நன்கு தேர்ந்திருப்பது (நன்றி : G.V.பிரகாஷ்) இவர் சிகரம் தொடும் காலம் வெகு தூரம் இல்லை . படத்திற்கு படம் இவர் மெருகு பெற்று இருப்பது உண்மையில் பாராட்டுக்குரிய விஷயம்.
கதாநாயகன் ஆர்யா இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொமொரு பொக்கிஷம்
தனக்கென ஒரு தனித்தன்மையை இவர் படத்திற்கு படம் மாறு பட்டு காட்டிருப்பது உண்மையில் அசத்தலான விஷயம். இவர் வரும் ஒவ்வொரு காட்சியும் மிக நன்று
சிறப்பான தோற்றம் மொத்த படத்துக்கும் குத்தகை தாரர் இவர் தான். நடிப்பில் நல்ல தேர்ச்சி . நாசர் , பால சிங் , ஹேமா பாஸ்கர், அனைவரும் நல்ல தேர்வு,
சம காலத்திற்கு படம் நகரும் சமயம் கால் டாக்ஸி ஓட்டுனர் மற்றும் மொழி பெயர்ப்பாளர் அவரோடு நடக்கும் சம்பாசனை சற்றே ஆயாசமாய் இருக்கிறது, தவிர்த்து இருக்கலாம்!
கதாநாயகி மிக நல்ல தேர்வு, அறிமுகம் என்ற சுவடே தெரியாது ஆர்யாவுக்கு போட்டியாக ஒவ்வொரு இடத்திலும் மனதில் பதிய வைக்கிறார் ஆமி ஜாக்சன் .
பூட்டி வைக்கப்பட்ட இதயத்தில் திறந்து வைக்கப்பட்ட ரகசியம் காதல் மட்டுமே.
காதலை மையபடுத்தி சொல்லப்படும் எந்த படமாக இருந்தாலும் அதில் புதுமை இருந்தால் தான் மக்கள் அங்கீகாரம் கிடைக்கும். இந்த படத்திலும் அதுபோல் சுவாரஸ்யமான பக்கங்கள் உள்ளது.
படம் துவக்கம் முதல் முடிவு வரை தொய்வு இல்லாது சிறப்பாக எடுத்து செல்வது இயக்குனர் என்றால் , அதை இணைத்து கொடுத்திருப்பது அந்தோணி யின் சிறப்பான எடிட்டிங்கும் தான் . இதைனையும் சொல்லிவிட்டு படத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று எண்ண வேண்டாம்.
இதை திரையில் சென்று பார்க்க வேண்டிய படம் என்பதால் சிறப்புகளை மட்டும் சொல்லி உங்கள் மனதில் படம் பார்க்கும் எண்ணத்தை விதைக்கும் எண்ணமே அன்றி வேறு ஒன்று இல்லை.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. மதராச பட்டினம் தவிர்க்க கூடாத படம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் ஜன ரஞ்சகமான படம்.
"காதல்" என்ற வார்த்தையில் உள்ள "ஜீவனை" காண அனைவரும் மதராச பட்டினம் சென்று வாருங்கள் .
review rendered by
jayaraman bharatwaj.
9840550333