பில்ல குட்டிக் காரன்


பில்ல குட்டிக் காரன் 



   சிறு குறிப்பு  : (மேலே உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை)

கோபால் அன்று மிக உற்சாகமாய் இருந்தான். பல மாதங்களாக முயற்சி செய்து தற்சமயம் தான் அவனுக்கு விடுப்பு கிட்டியது.  சொந்த ஊருக்கு செல்வதானால் யாருக்கு தான் 'மகிழ்ச்சி' இல்லாமல் இருக்கும். புகை வண்டி நிலையத்தில் நண்பர்களிடம் பிரியா விடைபெற்று , இதோ இறுதியாக ஊருக்கு கிளம்பி விட்டான்.  புகை வண்டி தான் முன்னோக்கி சென்றது. இருட்டை கிழித்து கொண்டு அது செல்லும் அதே வேகத்தில் இவன் மனம் பரபரவென பின்னோக்கி சென்றது.

"பாவூர்" பேரை சொன்ன உடனே இதழில் புன்னகை அரும்பியது . பெயருக்கு ஏற்றாற்போல்  'கோ' வாலு தான்.  வீட்டில் கடைக்குட்டியாய் பிறந்ததால் இவனுக்கு செல்லம் ஜாஸ்தி. அதை விட இவன் செய்யும் குறும்பால் பிரம்பு அடியும் ஜாஸ்தி.
ஊரில் மரியாதையான குடும்பத்து பிள்ளை. ஆனால் செய்யும் வால் தனத்திற்கு பஞ்சமே இல்லை. எத்தனையோ முறை அன்பாக சொல்லியும் , அதட்டி சொல்லியும் , முடிவில் அடித்து சொல்லியும் பார்த்தாயிற்று. இவன் திருந்துவதாக தெரியவில்லை. பால பருவம் என்பதால் யாரும் இவனை பொருட்படுத்தவில்லை. ஆனால் கோபால் வீட்டிலும் சரி , பள்ளியிலும் சரி சேட்டை செய்வதில் சமர்த்தன்.

பள்ளியில் வகுப்பு ஆசிரியர் கொஞ்சம் அசதியில் கண்ணயர்ந்தால் அவரை தலைமை ஆசிரியரிடம் போட்டு தந்து திட்டு வாங்கி தருவான்.  வீட்டில் இருந்து பள்ளிக்கு வருவதற்குள் எப்படியும் ஒரு நாலு பேர் அவனை வாழ்த்தி அனுப்பாவிட்டால் அன்று மழை தான் வரும்.
இப்படிதான் ஒருமுறை களத்துமேட்டில் அறுப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. ஒருபக்கம் 'போர்' அடித்து கொண்டும் மறுபக்கம் கட்டு கட்டாக வைக்கோல் கட்டிக்கொண்டும் வேலை நடந்து கொண்டிருந்தது.
கிராமத்தில் உள்ள சில அழகான காட்சிகளில் இதுவும் அடக்கம்.மாடுகள் சுற்றி சுற்றி வந்து கதிரில் இருக்கும் நெல்லை தனித்து பிரிப்பதும் அதை கட்டு கட்டாக பிடித்து கல்லில் அடிப்பததும் பார்பதற்கே ரசனையாக இருக்கும். இதில் வேலை களைப்பு தெரியாமல் இருக்க நாட்டு பாடல் கணீரென ஒலிக்கும்.

அனைவரையும் முடிக்கி விட்டு கொண்டு கையில் சுருட்டுடன் சக்கரை தேவர் நின்று கொண்டிருந்தார். கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை என்று சொன்னதுபோல் அவரும் அப்படிதான். அவருடைய கரிய உருவமும் முரட்டு தோற்றமும் முறுக்கிய மீசையும்,  பளீரென தூய உடையில் கையில் சுருட்டுடன் அவர் வருவதை பார்த்தாலே நின்று மரியாதை செலுத்தும் ஊர் மக்கள் ஒரு பக்கம். அவரிடம் பேசுவதற்கே பயந்து செல்லும் .

அறுப்பு நடந்த வயலில் பள்ளி சிறார்கள் ஊதுகோல் செய்யும் பழக்கம் உண்டு. அந்த கோஷ்டியில் நம்ம 'கோ' வாலும் இருந்தான்.  சிறார்களை விரட்டி விட்டாலும் யாரும் கவனிக்காது இருக்கும்போது ஊடே நுழைந்து ஊதுகோல் செய்யும் லாவகம் தனி திறமை தான்.  பீபீ எடுக்க போன நம்ம 'கோ'வாலு கண்ணில் அருகில் இருந்த  மாமரமும் அதில் காய்த்து தொங்கிய மாங்காயகளும்  பட்டு விட்டது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது போல் மா மரத்தில் கல்லை வீசி அடித்தான். அவன் போதாத காலம் கல் அனைவரையும் விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்த சக்கரை தேவர் தலையில் விழுந்தது.  'ஐயோ ' என்று குரல் கொடுத்த தேவர், கோபாவேசமாக திரும்பினார்.
கண்கள் அக்னியை துப்பின. முறுக்கிய மீசை இன்னும் சிலிர்த்து நின்றது.
அனைவரையும் விரட்டி கொண்டு வந்தார்.
குரங்கு குட்டியை தன் நெஞ்சில் சுமப்பது போல் கோபால் தன் புத்தக மூட்டையை முதுகில் சுமந்து ஓடினான். மற்றவர்களுக்கு இணையாக ஓட முடியாமல் ஒரு கட்டத்தில் தோட்ட காரனிடம் பிடிபட்டு விட்டான். அவன் கோபாலை சக்கரை தேவரிடம் இழுத்து சென்றான். அதற்குள் சக்கரைதேவர் அங்கிருந்த வேப்ப மரத்து கொப்பை ஒடித்து கொண்டு அடிப்பதற்காக வந்தார். அவரை பார்த்த பயத்தில் கோபால் , அவரிடம்  ஐயா விட்ருங்க.. நான் புல்ல குட்டி காரன் என்று கூறினான். அதை கேட்ட மாத்திரத்தில்
கையை ஓங்கி கொண்டு அடிக்க வந்தவர் இடி இடியென சிரித்தார். கோபாலுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் அடி விழவில்லை , அதுவரை மனதுக்கு சந்தோசமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. அப்படியே வந்தவர் நின்று எத்தன பிள்ளைடா பெத்த? என்று கேட்டார். தான் சொன்ன வார்த்தையின் விளக்கம் அறியாது மழுங்க மழுங்க முழித்தான் கோபால். இனிமேல் இந்த மாதிரி செய்யாதே என்று கண்டித்து அனுப்பி விட்டார்.

இன்றும் கோபாலுக்கு அவனுடைய பெற்றோர் வைத்த பெயரை விட இந்த பெயர் தான் அன்றில் இருந்து நிலைத்து. அனைவரும் அவனை பில்ல குட்டி காரன் என்று தான் அழைப்பார்கள். இன்று வரையிலும் அது தொடர்கிறது. கோபால் அதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. காரணம் இன்று அவன் புள்ள குட்டி காரன் தான்.

ஊர் வந்து சேர்ந்தவுடன், அவனுடைய பால்ய பருவம் திரும்பியது போல் உணர்ந்தான்.
ஆனால் அவனுடைய மாற்றத்தை  போலவே நிறையவே  மாறி இருந்தது 
"பாவுரின்" இன்றைய நிலை ! எங்கு பார்த்தாலும் பசுமையாய் தெரியும் வயல் வெளிகள் காணாது ஒரே வண்ண மயமான கட்டிடங்கள் உருவாகி இருந்தன. ஒரே நொடியில் மனம் வெறுமையில் நொறுங்கியது. ஏதோ ஒரு புதிய இடத்திற்கு வந்தது போல் உணர்ந்தான்.
'வாடா புல்ல குட்டி காரா' என்ற குரல் கேட்டதும் , குரல் வந்த திசையை நோக்கினான்.
சக்கரை தேவர் வெளுத்து போன மீசையுடன் அவனை பார்த்து சிரித்தவாறே வந்தார்.

எது மாறினாலும் மண்ணின் மனமும், மக்களின் மனமும் மாறாது இருந்தது அவனுக்கு பழைய உற்சாகத்தை திருப்பி தந்தது. தாய்  மாட்டை  பார்த்த கன்று போல் மனம் கூதூலமானது

பாவூர்  ராஜா   

2 Response to "பில்ல குட்டிக் காரன்"

  1. hemikrish Says:

    romba nalla irukku..varnanaiyum azhaga irukku.....konjam spelling mattum maathuna nalla irukkum(pilla)

  2. Aravind Manickam Says:

    awesome one!! loved this one